விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ. பதில் அளித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இலங்கை அரசு அறிவித்தது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், பிரபாகரன் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்ற தகவல், சி.பி.ஐ.யிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர், குத்தூஸ்புரத்தை சேர்ந்த மணி என்பவர், சி.பி.ஐ.,யிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி இருந்தார். அதில்,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாரா?
இலங்கை அரசு, பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதா?
இது தொடர்பாக அரசு ரீதியான தகவல் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா?
பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா?
ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் விடுவிக்கப்பட்டுள்ளாரா?
என்ற தகவல்களை கோரி இருந்தார்.
இந்நிலையில் இக்கேள்விகளுக்கு கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி சி.பி.ஐ., எம்.டி.எம்.ஏ., பிரிவு பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், ராஜீவ் கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குற்றவாளி தான் எனவும், பிரபாகரன் இறந்து விட்டதாக, இலங்கை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அரசு ரீதியான தகவல் பெறப்பட்டுள்ளதாகவும், பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இறப்புச் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு, அலுவலக ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment