Saturday, October 30, 2010

சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொன்ற சவீந்திர சில்வா ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரை

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது சரணடைய முன்வந்த போராளிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இவர் அண்மையில் பொறுப்பேற்றிருந்தார்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கடந்த 26ம் திகதி நியுயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் 'பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என்று பரவலாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில் அவருக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும், பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் புலிகளின் முக்கிய தலைவர்களைக் கொன்று விடுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டிருந்ததாக பின்னர் கேள்விப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா செவ்வி ஒன்றை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment