Sunday, October 17, 2010

சீனாவின் உளவாளியாக மாறுமா சிங்களத்தின் சர்வதேச உளவுப்பிரிவு?

இந்தியாவின் 'றோ' [ரா] ,அமெரிக்காவின் சி.ஐ.ஏ. [CIA ] போன்று, சர்வதேச புலனாய்வு அமைப்பொன்றை சிங்கள தேசம் நிறுவுகிறது.
இது நாட்டிக்கு வெளியே இயங்கும் நிறுவனம்..

இறுதிப்போரில் நேரடியாகவே தமிழின அழிப்பில் ஈடுபட்ட இராணுவ கட்டளை அதிகாரிகளும், அதற்கு உறுதுணையாக செயற்பட்ட புலனாய்வுச் சிங்கங்களும் ,வெளிநாட்டுத் தூதரகங்களில் இருந்து, இந்த அமைப்பினை இயக்கப் போகின்றார்கள்.


விடுதலைப் புலிகளின், வெளிநாட்டுச் செயற்பாடுகளை கண்காணிக்கவே இது உருவாக்கப்படுவதாக சிங்களம் கூறினாலும், இதன் இரட்டை செயற்பாடுகளை, மேற்குலக உளவு நிறுவனங்களும் புரிந்து கொள்ளுமென நம்பலாம்.


புலிகளை உளவு பார்ப்பது போல் வேடமிட்டு, சீனாவின் உளவாளிகளாக இவர்கள் செற்படப் போகின்றார்கள் என்பதுதான் உண்மை.


தற்போது நாணயப்போரில் [currency war ] தீவிரமாக ஈடுபடும் சீனாவும்,மேற்குலகமும், தமக்கிடையிலுள்ள முரண்பாடுகளை இன்னமும் அதிகரிக்கும் வாய்ப்புண்டு.


ஆகவே மேற்கிற்கு இணையாக, ஆசியாவில் பெரும் வல்லரசாக மாற முயலும் சீனாவிற்கு, மேற்குலகை உளவு பார்ப்பதற்கு ,நம்பகமான ஒரு ஆள் தேவை. அதற்கு சிங்கள தேசம் ஒரு பொருத்தமான தெரிவு என்பதில் சந்தேகம் இல்லை.


புலம் பெயர் நாடுகளில் , தமிழ் தேசியத்துடன் ஒட்டாத குழுக்களை அரவணைத்து, இதனை சிறப்பாக செய்யலாமென சிங்களம் எடை போடுகிறது.

அதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, நாடு வாரியாக இயங்கும் மக்கள் பேரவைகளை குறி வைத்து, இதன் சதிவலைகள் பின்னப்படும்.

'இனி நிமிர முடியாது' என்கிற தோல்வி மனப்பாங்கினை விதைத்து, அடிபணிவு அரசியலி ற்குள் புலம் பெயர் ஈழத்தமிழ் மக்களை முடக்கி விட , இந்த 'தூதரக புலனாய்வு பிரம்மாக்கள் ' முற்படுவார்கள்.


பொதுநலவாய நாடுகள் நடாத்திய விளையாட்டுப் போட்டியில், ' சரியாசனம்' பெற்ற மகிந்தர், ' யார் தருவார் இந்த அரியாசனம்' என்று இந்தியாவை மெச்சியவாறு இருந்தாலும், தனது நிரந்தர நண்பன் யார் என்பதை தெளிவாக உணர்வார்.


இராணுவத் தளபதிகள், இராஜதந்திரிகளாக உருமாற்றமடைவதை ,உலகை ஆளும் மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொள்ளும்.

ஆகவே,சிங்களத்தால் உருவாக்கப்படும் இந்த சர்வதேச புலனாய்வுப்பிரிவு, மேற்குலகிற்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அனைத்துலக பயங்கரவாத நிபுணர் ரோஹான் குணரட்னவும், பிரான்சின் தூதுவராக நியமிக்கப்படவிருக்கும் சிவப்புச் சிந்தனையாளர் தயான் குணதிலகாவும் ,இந்த புலனாய்வு மையத்தின், அறிவுரையாளர்களாக செயற்படுவார்கள் என்று நம்பலாம்.


ஆனாலும்,நாட்டில் அரசியல் செய்வதற்கும், வெளிநாட்டில் உளவு பார்ப்பதற்கும், விடுதலைப் புலிகள்தான் சிங்களத்திற்கு தேவைப்படுகிறது.




செய்தி ஆய்வு- இதயச்சந்திரன்

No comments:

Post a Comment