Tuesday, October 26, 2010

சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளில் தமிழ்தலைவர்கள் சாட்சியம் அளிக்ககூடாது! சர்வதேச விசாரணையே தேவை!! – தேசியத்திற்கான மக்கள் முன்னனி (முழுமையான விபரங்கள்)

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச விசாரணைக்குழு ஏற்படுவதற்கான அழுத்தங்களை கொடுக்குமாறும்,
தனியே போர்க்குற்றங்கள் என்ற வரையறைக்குள் நிற்காமல், தமிழ் மக்களுக்கான 60 ஆண்டுகால பிரச்சனைக்கான தீர்வுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைக்குமாறும்,
சிறிலங்கா அரசின் விசாரணைக்குழு முன்னிலையில் தமிழ் தலைவர்கள் சாட்சியம் அளிக்ககூடாதென்றும்
அவ்வாறு சாட்சியம் அளித்தால் சிறிலங்கா அரசின் விசாரணைக்குழுவுக்கான நம்பகத்தன்மையை ஏற்படுத்தி சர்வதேச விசாரணைக்குழுவுக்கான தேவையே இல்லாமல் செய்வதில் தமிழர் தரப்பு உடந்தையானதாகும் எனவும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனியால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வரதராஐன், செ.கஜேந்திரன் ஆகியோர் கூறிய கருத்துக்களின் முழுமையான தொகுப்பை தருகின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூறிய கருத்துக்கள்
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டிருந்தாலும் கூட சர்வதேச அரசியல் சூழலை சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
2009 மே மாதத்திற்குப் பின்னர் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச சூழல் மாறிவருவதனை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்தகைய சூழலில் தமிழ் மக்கள் எமது கொள்கை நிலைப்பாடுகளை விட்டுக் கொடுக்கமால் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதே எமது நிலைப்பாடு.
நாம் தோல்வியடைந்தவர்கள் என்று கருதவேண்டியதில்லை. நாம் தோல்வியடைந்துபோனவர்கள் என்று கருதி எமது கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து விட்டுக்கொடுப்புக்களை செய்து பின்வாங்க வேண்டிய எந்தத்தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை. இதுவரைகாலமும் தமிழ் மக்கள் போராடிவந்த அதே கொள்கை இலட்சியத்துடன் உறுதியாக இருக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நிலைப்பாடுகள் மாற்றமடையும் என்பதனை நாம் தெளிவாக கூறியிருந்தோம்.
அதற்கு உதாரணமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டுள்ளமை, இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளமையை நிரூபிக்கும் வகையில் போர்குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் ஐநா செயலாளர் நாயகம் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென மூன்றுபேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்ளுவதற்காகவே மகிந்த ராஐபக்கசவுடைய அரசாங்கம் மூன்றுபேர் கொண்ட குழு ஒன்றை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு என்ற ஒன்றை அவசர அவசரமாக அமைத்துள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை மக்களே விசாரணைகளை நடாத்தி எங்கள் பிரச்சினைகளை எமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளுகின்வோம் என்ற நோக்கில் குறிப்பாக சர்வதேச சமூகம் மத்தியில் இருந்து வரக்கூடிய அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காகவே எல்.எல்.ஆர்.சி என்ற ஆணைக்குழுவை அமைத்துள்ளனர்.
இலங்கையில் இனப்படுகொலை அல்லது போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதென்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கமேயாகும். இவ்வாறு தமக்கெதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தாமே ஆணைக்குழு அமைத்து தாமே விசாரணை நடாத்துவதென்பது நியாயத்தை வழங்கப்போவதில்லை.
அவ்வாறு அவர்களால் நடாத்தப்படும் விசாரணை சுயாதீனத் தன்மையுடன் நீதியாகவும் நடுநிலையாகவும் நடக்கும் என்று யாரும் கருதினால் அது மிகப்பெரும் தவறாகும்.
ஆகவே இன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள எல்.எல்.ஆர்.சி யானது வெறுமனே சர்வதேச மட்டத்தில் இருந்து வரக்கூடிய அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக எமக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கெதிராக நீதி தேவை. இனப் படுகொலையானது தமிழ் மக்களது இருப்பை இல்லாமல் செய்கின்ற செயற்பாடாகும்.
அதாவது நிலத்தில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசத்தின் இருப்பை படிப்படியாக அழித்து இல்லாமல் செய்தல். (Dismantle the Existence of the Tamil Nation)) என்பதே கட்ந்த 60 வருடங்களாக மாறி மாறி ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்களில் செயற்பாடாகும்.
இதன் உச்சக்கட்டமே மகிந்தராஐபக்சே அரசாங்கத்தின் கடந்த கால ஆட்சியில் இடம் பெற்ற சம்பவங்களாகும். ஏங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை சர்வதேச சமூகத்தின் முன்நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.
அதனை நிரூபிப்பதன் ஊடாக இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஓர் இனத்திற்கு சர்வதேச சட்டங்கள் மூலம் கிடைக்கக் கூடிய அரசியல் நன்மைகளை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
துமிழ் மக்களுக்கு இதுவரைகாலமும் இடம்பெற்ற அநீதிகளுக்கு நீதி கிடைப்பதென்றால் அது இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) ஊடாக ஒருபோதும் கிடைக்கமாட்டாது. அதுவும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் நியாயமும் ஸ்ரீலங்கா வின் கட்டமைப்புகள் ஊடாக எமக்கு ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை.
நீதி கிடைக்கப்போகின்றதென்றால் ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலமாகவே கிடைக்க முடியும். அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடு எக்காரணம் கொண்டும் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசினால் உருவாக்கப்பட்டுள்ள எல்.எல்.ஆர்.சி என்ற அமைப்பிற்கு சாட்சியமளிக்க கூடாது.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெற்ற இன்னமும் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை மூடிமறைக்கின்ற வகையிலும், இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா அரசு மீது ஏற்படக் கூடிய சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவதற்காகவும் அரசினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கக் கூடாது.
கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்களை தொகுத்து ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த ஆவணப்படுத்தலை எல்.எல்.ஆர்.சி ஊடாக மேற்கொள்ள வேண்டிய எந்த தேவையும் இல்லை.
இனப்படுகொலையானது எத்தனை கோணங்களில் எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதனை நிரூபிக்கக் கூடிய வகையில் தயாரிக்க வேண்டும். ஆதன நாம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.
அவ்வாறான அறிக்கை ஒன்றினைத் தயாரித்து அதனை நாம் எல்.எல்.ஆர்.சி போன்ற இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசை தண்டனையில் இருந்து காப்பாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள எல்.எல்.ஆர்.சி ற்கு வழங்கப்போவதில்லை. ஆவ்வாறு யாரும் வழங்குவதனை நாம் எதிர்க்கின்றோம். அவ்வாறு சாட்சியங்களை எல்.எல்.ஆர்.சி ற்கு வழங்குவது அந்த அமைப்பிற்கு நாம் அங்கீகாரம் வழங்குவதாக அமையும்.
அதுவும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள எல்.எல்.ஆர்.சி யானது நடுவு நிலைமையற்றது என்று கூறி சர்வதேச மட்டத்தில் புகழ் வாய்ந்த தலைவர்களும், அமைப்புக்களும் நிராகரித்துள்ள இவ்வேளையில் அந்த அமைப்பை காப்பாற்றும் முயற்சியில் எவரும் ஈடுபடக் கூடாது.
ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது எல்.எல்.ஆர்.சி ற்கு சாட்சியமளிப்பதில்லை என முடிவு செய்துள்ளது. அதாவது ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட, இன்னமும் மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை செயற்பாடுகளை மூடி மறைக்கின்ற செயற்பாடுகளுக்கு துணைபோகக் கூடாது என்ற அடிப்படையிலேயே மேற்படி முடிவை எடுத்துள்ளோம்.
அதேவேளை இனப்படுகொலை தொடர்பாக ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று இடம்பெற வேண்டுமென வலியுறுத்துகின்றோம். போர்க்குற்றங்கள் பற்றியல்ல. போர்க்குற்றங்கள் பற்றி மட்டும் விசாரணை வைப்பதென்பது நடைபெற்றுள்ள இனப்படுகொலையை கொச்சைப்படுத்துவதாகவே அமையும். நடந்திருப்பது ஓர் மூன்றாண்டுப் பிரச்சினை அல்ல மாறாக 60 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினை.
இலங்கையில் வெறுமனே போர்குற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக சர்வதேச சமூகம் அக்களை காட்டினாலும் கூட தமிழ் மக்களாகிய நாம் போர்க் குற்றங்களை மட்டும் விசாரணை செய்யும் செயற்பாடுகளுக்காக எமது சக்தியை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.
இனப்படுகொலை என்பதற்கு அரசியல் நோக்கம் ஒன்று இருக்கும். அதாவது ஒரு இனத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்காக மொழி அழிப்பு, கலாசார சிதைப்பு, தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்தல், குடித்தொகை பரம்பலை மர்றறியமைத்தல் உட்பட் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
போர்க் குற்றம் என்னும்போது யுத்தம் ஒன்று இடம்பெறும் காலப்பகுதியில் மட்டும் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களாகும். உதாரணமாக வைத்தியசாலை மீது குண்டு வீசுதல், பொது மக்களின் இலக்குகள் தாக்கப்படுதல், பொது மக்கள் கொல்லப்படுதல் என்பவாக இருக்கும்.
ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெற்ற ஒவ்வொரு போர்க்குற்றங்களும் நன்கு திட்டமிடப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதாகும்.
இத் தாக்குதல்கள் தவறுதலாக இடம்பெற்றவை அல்ல திட்டமிட்ட அடிப்படையில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறு வேண்டுமென்று மேற்கொண்டமைக்கு காரணம் அந்த இனத்தை இல்லாமல் செய்வதேயாகும்.
இலங்கையில் போர் நடைபெற்ற போது பொது மக்கள் கொல்லப்பட்டதும் பாதிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாகும்.
இதுவரை காலமும் தமிழ் மக்களை திருப்பிப் பார்க்காத சர்வதேச சமூகம் இன்று தமிழ் மக்களை திருப்பிப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் போர்க்குற்றம் பற்றிப் பேசுகின்றனர். அது ஓர் நல்ல விடயம். ஆனால் இலங்கையில் இடம் பெற்றது போர்க் குற்றம் மட்டுமல்ல திட்டமிட்ட இனப்படுகொலை என்பதனை சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டும்.
கடந்த 60 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ரீதியான அழிப்புக்கள், கல்வி, மொழி, கலாசார ரீதியான அழிப்பு, நிலப்பறிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள் உட்பட தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் மற்றும் நடைபெற்ற ஓவ்வொரு போர்க்குற்ற சம்பவங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்பதனை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி, நடைபெற்ற ஒவ்வொரு சம்பவங்களும் நன்கு திட்டமிடப்பட்டு இனப்படுகொலை நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை நிரூபிக்க வேண்டும்.
சி. வரதராஐன் அவர்கள் தெரிவித்த் கருத்துக்கள்

போர்க்குற்றம் என்பதற்கு மட்டும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பொக இருந்தால் ஒரு கட்டத்தில் சர்வதேச சமூகம் போர்க்குற்றத்திற்காக அதனுடன் தொடர்புபட்ட ஒரு சில அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குகின்ற நிலை ஏற்பட்டாலும் கூட அதன் மூலம் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவதில்லை.
இனப்படுகொலைக்கு உள்ளாக்கபட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் நன்மைகள் ஏதும் ஏற்படாது. மாறாக தமிழ் மக்களை அழித்த ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்ற மனநிறைவு மட்டும் ஏற்படக் கூடும்.
உதாரணமாக தமிழ் மக்களை அழிக்கும் யுத்தத்திற்கு சரத்பொன்சேகா நேரடியாக தலைமை தாங்கி வழிநாடத்தியிருந்தார். அவரும் ஓர் போர்க் குற்றவாளியே. தற்போது அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அதனால் தமிழ் மக்களுக்கு மனிநிறைவு மட்டும் ஏற்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்களின் சிறு பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கிடைக்கவில்லை. இதே நிலைப்பாடுதான போர்க் குற்றங்கள் என்பதன் மூடிவிலும் ஏற்படும்.
ஆனால் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தங்களை கொடுத்து இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது என்பதனை நிருபிப்போமாக இருந்தால் அவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் அரசியல் ரீதியான நன்மைகள் கிடைத்தே தீரும்.
செ.கஜேந்திரன் கருத்துக் கூறும்போது
போர்குற்றம் இடம் பெற்றமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் முடிவில் போர்க் குற்றம் இடம் பெற்றமையை மட்டுமே நிரூபிக்க முடியும் மாறாக இனப்படுகொலை இடம் பெற்றது என்பதனை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும்.
அதேவேளை இனப்படுகொலை இடம் பெற்றது எனபதனை நிரூபிப்தற்கான முயற்சிகளில் ஈடுபடுவோமாக இருந்தால் அதன் மூலம் போர்க் குற்றங்கள் அனைத்தையும் நிச்சயம் நிரூபிக்க முடியும் என்பதுடன் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியாக நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் இறுதிக் காலத்தில் திட்டமிட்ட இனப்படுகொலையை மேற்கொண்ட அரசுக்கும் அதற்கேயுரிய தண்டனைகளும் வழங்கப்படும்.
இச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர் தமிழ் மக்களிடமும் நாம் வேண்டிக் கொள்ளுவது. புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை போர்க் குற்றங்கள் என்ற சிறிய வரையறைக்குள் மட்டுப்படுத்த முயல வேண்டாம்.
முற்றாக இனப்படுகொலை என்பதனை நிரூபிக்கும் முய்றசிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம். மாறாக நீங்கள் மேற் கொள்ளுகின்ற போர்க் குற்றம் என்ற செயற்பாடு தமிழ் மக்களுக்கு அரசியல் விளைவுகளை பெற்றுத்தராத சூனியத்திற்குள் தள்ளளுவதாக அமைந்துவிடக் கூடாது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment