Saturday, October 23, 2010

சிறிலங்காவில் பெருமளவு வெடிபொருட்கள், ஆயுத தளபாடங்களை பதுக்குகிறது சீனா - இந்தியா சந்தேகம்

அம்பாந்தோட்டையில் அமையவுள்ள இந்தியத் துணைத் தூதரகம் சீனாவின் முத்துமாலை மூலோபயத்தினை கண்காணிப்பதற்கான நிலையமாக அமையப்போகிறது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது கருத்துப்பக்கத்தில் மேலும் அந்த ஊடகம் தெரிவித்திருப்பதாவது,

எதிர்வரும் நவம்பர் 19ம் நாளன்று சிறிலங்காவின் அடுத்த குடியரசு அதிபராக மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காகப் பதவியேற்கும் அதேநேரம் அம்பாந்தோட்டை பகுதியில் பதிதாக அமைக்கப்பட்டிருக்கும் துறைமுகத்திற்குள் வர்த்தகத் தேவைகளுக்கான முதலாவது கப்பல் நுழையவுள்ளது.

இதற்கமைய அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இது இவ்வாறிருக்க, அம்பாந்தோட்டைப் பகுதியில் தனது துணைத் தூதரகத்தினை அமைக்கும் பணியினை இந்தியா முடுக்கிவிட்டிருக்கிறது.

துறைமுகம் வர்த்தக ரீதியாகத் திறக்கப்படுவதற்கு முன்னரே துணைத் தூதரகத்தினைத் திறப்பதற்கு இந்தியா விரும்புகிறதா அல்லது இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மகிந்த இந்தியாவிற்குச் செல்லுவதற்கு முன்னர் அம்பாந்தோட்டைப் பகுதிக்குச் சென்றிருந்த சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் அசோக் என் காந்தா தூதரகம் அமைக்கும் முனைப்பு எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை நேரடியாக அவதானித்திருந்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் துணைத் தூதரங்களை அமைக்கும் இந்தியாவினது பணி எத்தகைய கட்டத்தில் இருக்கிறது என்ற விபரத்தினைத் தெரிவிப்பதற்காகவே அசோக் காந்தா டில்லிக்குச் சென்றிருந்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்புக்கு முன்னதாக இந்தியத் தூதுவர் இது தொடர்பான தனது அறிக்கையினை சமர்ப்பித்திருக்கிறார்.

அம்பாந்தோட்டையில் தனது துணைத் தூதரகத்தினை அமைக்கும் எண்ணத்தினை இந்தியா முதன்முதலில் சிறிலங்காவிற்குத் தெரியப்படுத்தியபோது மகிந்த அரசாங்கம் இந்த முடிவினை எதிர்த்திருந்தது.

ஆனால் ஈற்றில் கடுமையான அழுத்தங்களைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த வேண்டுகைக்கு மகிந்த அரசாங்கம் செவிசாய்த்திருந்தது.

அம்பாந்தோட்டையில் தனது துணைத் தூதரகத்தினை அமைக்கும் இந்தியாவின் யோசனையினை மகிந்த அரசாங்கம் ஆரம்பத்தில் எதிர்த்தமை நியாயப்படுத்தக்கூடியதே.

இந்தப் பிராந்தியத்தில் எப்படியாவது தனது துணைத் தூதரகத்தினை அமைக்கவேண்டும் என இந்தியா ஒற்றைக்காலில் நின்றது சிறிலங்காவிற்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் 22 ஓகஸ்ட் 2007 அன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துநின்ற ஒரு கப்பல் தொடர்பிலான சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அம்பாந்தோட்டைப் பகுதியில் தனது துணைத் தூதரகத்தினை அமைக்கவேண்டிய தேவையினை இந்தியா நியாயப்படுத்தியிருந்தது.

பாகிஸ்தானின் கராய்ச்சி துறைமுகத்திலிருந்து பங்களாதேசின் சிட்டிகொங் துறைமுகத்திற்கு படைத்துறைசார் பொருட்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட சரக்குகளை ஏற்றிச் சென்ற எம்.வி மொல் அட்மிறேசன் என்ற பனாமாவில் பதியப்பட்ட கப்பலை 22 ஓகஸ்ட் 2007 அன்று சிறிலங்கா கடற்படையினர் இடைமறித்திருந்தார்கள்.

குறித்த இந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கான சரக்குகளைக் கொண்டுசெல்லக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே கொழும்பு துறைமுகத்தில் தரித்துநின்ற இந்தக் கப்பலைச் சிறிலங்கா கடற்படையினர் சோதனையிட்டிருந்தார்கள்.

’உருக்குத் தலைக்கவசங்கள், குண்டு துளைக்காத ஆடைகள் மற்றும் டி.எம்.எஸ் வகையினைச் சேர்ந்த சப்பாத்துக்கள்' என்பன குறிப்பிட்ட இந்தக் கப்பலில் இருந்ததாகப் பட்டியலிடப்பட்டிருந்தது.

கப்பலில் எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள் யாருக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்ற எந்த உத்தியோகபூர்வத் தகவல் எதனையும் கப்பல் கொண்டிருக்கவில்லை.

இந்தப் படைத்துறைசார் பொருட்கள் பாகிஸ்தானின் படைத்தளபாட உற்பத்தி நிறுவனம் ஒன்றிலிருந்து பங்களாதேஸ் இராணுவத்திற்கு அனுப்பப்படுவதாக கப்பல் அதிகாரிகளிடம் நடாத்திய விசாரணையின் போது தெரியவந்தது.

எவ்வாறிருப்பினும் பங்களாதேஸ் இராணுவத்திற்காக இதுபோன்ற எந்தப் பொருட்களும் கொள்வனவுசெய்யப்படவில்லை என பங்களாதேசினது அதிகாரிகள் உறுதிபடக் குறிப்பிட்டிருந்ததார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான், சிறிலங்கா மற்றம் பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் அரசியல் உயர்மட்டத்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.

குறித்த இந்தப் பொருட்கள் யாருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்ற உத்தியோகபூர்வ தகவல் டாக்காவிலிருந்து கிடைக்கும் வரை கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பலை விடுவிக்கமுடியாது என சிறிலங்கா உறுதிபடக்கூறியது.

யாருக்காக இந்தப் பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறது என்ற தகவலை வெளியிடுவதற்கு பங்களாதேஸ் இராணுவத்தினர் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து அப்போது பங்களாதேசில் ஆட்சியிலிருந்த ஜெனரல் மூவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் மீது பாகிஸ்தான் கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்தது.

ஈற்றில் இந்தப் பொருட்கள் தமக்கானதே எனக்கூறி பங்களாதேஸ் இராணுவம் உத்தியோகபூர்வக் கடிதத்தினை அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தக் கப்பல் விடுவிக்கப்பட்டிருந்தது. ஈற்றில் குறித்த இந்தக் கப்பலில் எடுத்துவரப்பட்ட படைத்துறைசார் பொருட்கள் சீனக் கப்பல் ஒன்றுக்கு மாற்றப்பட்டு எதுவெனத் தெரியாத ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.

கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் என்பனவும் இந்தப் பொருட்களுள் இருந்ததாக கொழும்புத் துறைமுகத்தில் கப்பலைச் சோதனையிட்ட சிறிலங்காவினது கடற்படை அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

வழமைக்கு மாறான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலுள்ள துறைமுகங்கள் ஊடாக இந்தியாவிலுள்ள பயங்கரவாத அமைப்புக்களின் தேவைக்காகவே சீனா குறித்த இந்த ஆயுதங்களைக் கடத்தியிருக்கக்கூடும் எனவும் இது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்லது எனவும் இந்தியா மகிந்த அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மே 2008ம் ஆண்டு 'ஜேன்சினது புலனாய்வுப் பார்வை' என்ற புலனாய்வுச் சஞ்சிகையில் சீனாவின் ஆயுதக்கடத்தல் வலையமைப்பு தொடர்பான முழுமையான ஆய்வு வெளிவந்திருந்தது. இந்த அறிக்கை தொடர்பிலும் இந்தியா மகிந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தது.

'போர்ப் பிரபுக்கள்' என்ற தலைப்பில் ஜேன்சினது புலனாய்வுப் பார்வை என்ற சஞ்சிகை வெளியிட்ட கட்டுரையில் சீனாவின் ஆயுதக் கடத்தல் வலையமைப்புக்கள் தென்அமெரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியத்திலுள்ள பயங்கரவாத அமைப்புக்களுக்கான போர்த் தளபாடங்களை எவ்வாறு விநியோகிக்கின்றன என்பதை விலாவாரியாக விபரிக்கப்பட்டிருந்தது.

ஆயுதக் குழுக்களுக்கு சட்டவிரோத ஆயுத தளபாடங்கள் விநியோகிக்கப்படும் ஒளிப்படங்களையும் இந்தக் கட்டுரை தன்னகத்தே கொண்டிருந்தது.

குறிப்பிட்ட இந்த வலையமைப்பானது மோதல்களில் ஈடுட்படிருக்கும் இரண்டு தரப்புக்குமே, உதாரணமாக விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் ஆயுத தளபாடங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு மற்றும் இந்தியாவின் தென்கிழக்கு மாநிலங்களிலுள்ள ஆயுதக்குழுக்கள் ஆகியவற்றுக்கும் இதே வலையமைப்பு படைத்தளபாடங்களை விநியோகித்திருக்கிறது.

சீனாவின் அரச ஆயுத உற்பத்தி நிறுவனமான நொறிங்கோ நிறுவனத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுசெல்லப்பட்ட குறிப்பிட்ட இந்தப் படைத்தளபாடங்கள், தற்போது பங்களாதேசைத் தளமாகக் கொண்டு செயற்படும் இந்தியாவினது கிளர்ச்சிக் குழுவான அசாமின் ஐக்கிய விடுதலைப் படை [உல்பா] என்ற கிளர்ச்சிக் குழுவிற்கானதே என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆர்.பி.ஜி வகையினைச் சேர்ந்த உந்துகணை செலுத்திகள், ரி-85 வகையினைச் சேர்ந்த இயந்திரத் துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன இந்தத் தொகுதியில் இருந்திருக்கின்றன.

சீனாவின் அரச நிறுவனமான நொறிங்கோ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எழுந்த விவாதத்தினைத் தொடர்ந்த 2003ம் ஆண்டு சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்குமிடையே இராசதந்திர ரீதியிலான முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

ஆயுத விநியோகத்தர்கள் மற்றும் ஆயுத முகவர்களாகச் செயற்படும் தனியார் நிறுவனங்கள் ஊடாகவே நொறிங்கோ நிறுவனம் இதுபோன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என ஜேன்சின் புலனாய்வுப் பார்வை ஏடு தகவல் வெளியிட்டிருந்தது.

உதாரணமாக தாய்லாந்தினைத் தளமாகக்கொண்ட எச்.டி உள்ளக வர்த்தகத் தனியார் நிறுவனம் என்ற நிறுவனத்தின் ஊடாகவே பாங்கொக்கில் நொறிங்கோ தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

கரடியனாறு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான வெடிபொருட்கள் இதுபோல களஞ்சியப்படுத்தி வைக்கப்படுவது தொடர்பில் தனது அச்சத்தினை இந்தியா மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் வெளியிட்டிருந்தது.

இந்தியாவினது இதுபோன்ற பாரதூரமான கரிசனைகளைச் சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்கமுடியாது. இந்தியா அம்பாந்தோட்டையில் தனது துணைத் தூதரகத்தினை அமைப்பதற்குச் சிறிலங்கா அனுமதித்ததன் பின்னணி இதுதான்.

அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்தியாவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுமெனில் அம்பாந்தோட்டை பகுதியில் அமையவுள்ள இந்தியத் துணைத் தூதரகம் அதனை அவதானித்து அது தொடர்பான தகவல்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கும் என மகிந்த அரசாங்கம் நம்புகிறது.

எது எவ்வாறிருப்பினும் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளைச் சீனாவிற்கு வழங்கிய மகிந்த அரசாங்கம் அதனைத் தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தினைப் புனரமைத்துப் புதுப்பிக்கும் பணியையும் சீனாவிற்கே வழங்கியிருப்பது இந்தியாவின் சந்தேகத்தினை மேலும் அதிகரித்திருக்கிறது.

அம்பாந்தோட்டையில் அமையவுள்ள தனது துணைத் தூதரகத்தில் இந்தியா ஒற்றர்களைப் பணியில் அமர்த்தக்கூடும் என்ற அச்சத்தினைச் சீனாவும் மகிந்த அரசாங்கமும் வெளியிட்டிருக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தகத் தேவைகளுக்காகத் திறக்கப்படும் அதே காலப்பகுதியில் இந்தியாவும் அம்பாந்தோட்டையில் தனது துணைத் தூதரகத்தினைத் திறக்குமெனில், ஆசியாவின் இருபெரும் அரக்கர்களும் ஒருவரை ஒருவர் அவதானிக்கும் தன்மையினை உலகு அவதானிக்கும்.

No comments:

Post a Comment